Aug 12, 2022 03:54 AM

’லால் சிங் சத்தா’ திரைப்பட விமர்சனம்

24b84ef2bb73f4e691bf607e2cc42388.jpg

Casting : Aamir Khan, Kareena Kapoor, Naga Chaitanya, Mona Sing, Ahmad Ibn Umar, Manav Vij

Directed By : Advait Chandan

Music By : Pritam and Tanuj Tiku

Produced By : Aamir Khan Productions & Viacom18 Studios

 

லால் சிங் சத்தா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நாயகன் அமீர் கான், ரயில் பயணத்தின் போது சக பயணிகளிடம் தனது வாழ்க்கை கதையை சொல்கிறார். தனது பள்ளி பருவம், கல்லூரி பருவம், தனது தோழியின் மீது கொண்ட அன்பு, காதல், அம்மாவின் அறிவுரை, தனது வாழ்க்கையில் நடந்த அதிசயங்கள் என்று அனைத்தையும் அவர் விவரிப்பதை மற்ற பயணிகள் ஆர்வமுடன் கேட்பது போல், நாமும் அமீர் கானின் ரயில் பயணத்தில் இணைந்து அவரது கதையுடன் பயணிக்க தொடங்கி விடுகிறோம்.

 

எந்த ஒரு விஷயத்தையும் மெதுவாக புரிந்துகொள்ளும் திறமை கொண்ட அமீர் கானுக்கு நடக்க முடியவில்லை. ஆனால் மருத்துவர் அவரின் பிரச்னை காலில் இல்லை, அவருடைய மூளையில் தான் இருக்கிறது, என்கிறார். ஆனால், அவருடைய அம்மாவோ ”உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நீயும் மற்றவர்கள் போல நன்றாகவே இருக்கிறாய்” என்று அவருக்கு ஊக்கமளிக்கிறார். பள்ளியில் சேரும் லால் சிங்கிற்கு அம்மாவை போலவே பாசம் காட்ட மற்றும் ஊக்கமளிக்கும் தோழியாக கரீனா கபூர் கிடைக்கிறார்.

 

கரீனா கபூரை தனது அம்மாவிற்கு அடுத்தப்படியாக பார்க்கும் அமீர் கான், அவர் மீது காதல் கொள்ள அவரோ தனது கனவு உலகத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் அமீர் கானை நிராகரிக்கிறார். இருந்தாலும் அவர் மீது தொடர்ந்து அன்பு செலுத்துகிறார் அமீர் கான். ஒரு கட்டத்தில் அமீர் கானை கரீனா கபூர் பிரிந்து வெகுதொலைவில் சென்றுவிட, ராணுவத்தில் சேரும் அமீர் கான் சாதனை படைக்கிறார், மிகப்பெரிய தொழிலதிபராகிறார். இதெல்லாம் எப்படி நடந்தது? என்பதும் அவர் மீண்டும் கரினா கபூருடன் சேர்ந்தாரா இல்லையா, என்பதும் தான் படத்தின் கதை.

 

அமீர் கான் பள்ளி பருவம் முதல் அவரது மகனின் பள்ளி பருவம் வரை பயணிக்கும் கதையை அந்த காலக்கட்டத்தில் நடந்த சமூக மற்றும் அரசியல் சம்பவங்களுடன் கோர்த்து சொல்லியிருப்பது ரசிக்க வைக்கிறது.

 

லால் சிங் சத்தா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அமீர் கான், தனது நடிப்பு மூலம் நம்மை இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக கட்டிப்போடுகிறார். எதிரியை கூட காப்பாற்றும் மனம் படைத்த அமீர் கான், தன்னை காதலி நிராகரித்தாலும் தொடர்ந்து அவர் மீது அன்பு காட்டுவதும், ஒவ்வொரு முறையும் என்னை கல்யாணம் செய்துக்கிறீயா, என்று ஏக்கத்தோடு கேட்பது நம்மை களங்கடிக்கிறது. மாஸ் ஹீரோ என்ற இமேஜை ஓரம் தள்ளிவிட்டு கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை கச்சிதமாக மாற்றிக்கொண்ட அமீர் கான், படம் முழுவதும் லால் சிங் சத்தா என்ற கதாப்பாத்திரமாகவே வலம் வந்து நம் மனதுக்குள் இறங்கிவிடுகிறார்.

 

கனவு உலகத்தில் வாழும் அழகியாக வலம் வரும் கரீனா கபூர், ஒவ்வொரு முறையும் தனது கனவு நிறைவேறாத போது களங்கும் இடம் அசத்தல். அழகில் மட்டும் இன்றி நடிப்பிலும் ரசிகர்களை கவர்கிறார் ரூபா என்ற வேடத்தில் நடித்திருக்கும் பேரழகி கரீனா கபூர்.

 

அமீர் கானின் ராணுவ நண்பர் வேடத்தில் நடித்திருக்கும் நாகை சைதன்யாவின் தோற்றமும் நடிப்பும் வித்தியாசமாக இருக்கிறது. அமீர் கானின் அம்மாவாக நடித்திருக்கும் மோனா சிங், முகமது என்ற வேடத்தில் நடித்திருக்கும் முகமது பாஜி என அனைவரும் அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்கள்.

 

கெளரவ தோற்றத்தில் நடித்திருக்கும் ஷாருக்கான் வரும் காட்சிகள் ரசிகர்களை கொண்டாட வைக்கும். சாதாரண டிவி நடிகராக இருந்து பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் ஷாருக்கானின் வளர்ச்சியை லால் சிங் சத்தாவின் வாழ்க்கை சம்பவத்தோடு இணைத்திருப்பது படத்தின் கூடுதல் சிறப்பு.

 

ஒளிப்பதிவாளர் சத்யஜித் பாண்டே லால் சிங் சத்தா என்ற மனிதரின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்துவதில் அதிகம் மெனக்கெட்டிருப்பதோடு, வரலாற்று சம்பவங்களை திரைப்பட காட்சிகளாக அல்லாமல் லால் சிங்கின் வாழ்க்கை சம்பவங்களாக நேர்த்தியாக காட்டியிருக்கிறார்.

 

ப்ரீதம் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கிறது. தனுஜ் டிக்குவின் பின்னணி இசை கதையின் போக்கை போலவே இதமாக பயணிக்கிறது.

 

அதுல் குல்கர்னியின் கதைக்கு அத்வைத் சந்தன் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் அதிசயங்களை மிக சாதாரணமாக விவரிப்பதோடு, அந்த மனிதனையும் மிக சாதாரணமானவராக பயணிக்க வைத்திருப்பது படம் பார்ப்பவர்களையும் கதையுடன் பயணிக்க வைக்கிறது.

 

பஞ்சாப் பொற்கோயில் தாக்குதல் அதை தொடர்ந்து நடந்த கலவரம், அத்வானியின் ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு கலவரம், கார்கில் போர் என்று நாட்டில் நடந்த மிகப்பெரிய சம்பவங்களை அமீர் கானின் வாழ்க்கை கதையுடன் சேர்த்து சொல்லியிருப்பதோடு, அனைத்து பிரச்சனைக்கும் மதம் தான் காரணம் என்பதையும், மதத்தால் ஏற்படும் கலவரத்தை மலேரியா என்று விமர்சித்து இருப்பதும் பாராட்டும்படி இருக்கிறது.

 

மூளையில் பிரச்சனை உள்ள ஒரு நபர் எப்படி ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார், எதிரி நாட்டைச் சேர்ந்த ஒருவர் காப்பாற்றப்படுவதும், அவர் மிக சுலபமாக ராணுவத்திடம் இருந்து தப்பித்து நாட்டில் உலாவுவதும் எப்படி என்று தெரியவில்லை. இந்த இரண்டு விஷயங்களையும் தவிர மற்ற அனைத்தும் ஏற்றுக்கொள்ளும்படியும், ரசிக்கும்படியும் இயக்குநர் அத்வைத் சந்தன் சொல்லியிருக்கிறார்.

 

திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும் படம் பார்ப்பவர்கள் கதையோடு ஒன்றிவிடும் அளவுக்கு சுவாரஸ்யமாக நகர்கிறது. அமீர் கான் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு திருப்புமுனைகளும் ஆச்சரியமாக இருந்தாலும் படம் பார்ப்பவர்கள் வியக்கும்படியும், கொண்டாடும் வகையிலும் இருக்கிறது.

 

மொத்தத்தில், ‘லால் சிங் சத்தா’-வின் ரயில் பயணம் சுவையாகவும், வாழ்க்கை பயணம் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

 

ரேட்டிங் 4/5