Sep 28, 2019 04:05 AM

’நம்ம வீட்டுப் பிள்ளை’ விமர்சனம்

c04722ec90d90a96633e1ce4c4dc6b9b.jpg

Casting : Sivakarthikeyan, Anu Immanuvel, Aishwarya Rajesh, Samuthirakkani, Suri, Bharathiraja

Directed By : Pandiraj

Music By : D.Imman

Produced By : Sun Pictures

 

தொடர்ந்து இரண்டு தோல்விப் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயனும், தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் பாண்டிராஜும் இணைந்திருக்கும் இந்த ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ வெற்றிப் படமா அல்லது தோல்விப் படமா, என்று பார்ப்போம்.

 

தாத்தா, சித்தப்பா, பெரியப்பா, மாமா, மச்சான் என அனைத்து சொந்தங்களும் இருக்கும் பெரிய குடும்பத்து வாரிசு என்றாலும், அப்பா இல்லாத காரணத்தால் சிவகார்த்திகேயனின் குடும்பத்தை அவரது சொந்தங்கள் மதிப்பதில்லை. இதனால், தனது தங்கைக்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து வைத்து கெத்து காட்ட நினைக்கும் சிவா, ஊரெல்லாம் சுற்றி மாப்பிள்ளை தேடினாலும், அவரது தங்கை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை. இதற்கிடையே, சிவகார்த்திகேயன் மீது இருக்கும் பகையை மனதில் வைத்து, ஐஸ்வர்யா ராஜேஷை நட்டி திருமணம் செய்துக்கொண்டு பழிவாங்க, தங்கை பாசத்தால் பதறும் சிவகார்த்திகேயன் மச்சானை எப்படி சமாளித்து பிரச்சினைகளை தீர்க்கிறார், என்பது தான் படத்தின் கதை.

 

முதல் பேராவில் சொன்ன வெற்றி மற்றும் தோல்வி இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு சுமாரான படமாகவே இப்படம் உள்ளது. படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள், ஆளுக்கு ஒரு காட்சி என்று அனைவரையும் பயன்படுத்தியிருக்கும் இயக்குநர் பாண்டிராஜ், சினிமாவில் ஒரு சீரியல் என்ற ரீதியில் தான் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

 

சிவகார்த்திகேயன் செண்டிமெண்ட் படம் என்பதால் ரொம்ப அழுத்தமாகவும், அதே சமயம் அசால்டாகவும் நடிக்காமல், ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இயல்பாக நடித்திருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் ரசிகர்களை பீல் பண்ண வைக்கும் சிவா, பல இடங்களில் எண்டர்டெயின்மெண்டும் செய்திருக்கிறார். சூரியுடனான காம்பினேஷன்நன்றாக ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது.

 

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஹீரோயின் அனு இம்மானுவேல், சிவாவை காதலிக்கிறார், டூயட் பாடுகிறார், மற்றபடி அம்மணிக்கு வேற எந்த வேலையும் இல்லை.

 

சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், நடிப்பில் கவர்கிறார். சிவாவின் தங்கையாக மட்டும் இன்றி சக நடிகையாகவும் நடிப்பில் போட்டி போட்டு நடித்திருக்கிறார்.

 

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லும் அளவுக்கு அதே பாணியிலான ஒரு செண்டிமெண்ட் படம். சீரியலுக்கு தேவையான அனைத்தையும் வைத்துக் கொண்டு, அதை சினிமாவாக எடுத்திருக்கும் இயக்குநர் பாண்டிராஜ், திரைக்கதையை படு ஸ்லோவாக நகர்த்தினாலும், செண்டிமெண்ட் காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்துவிடுகிறார்.

 

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்தை கலர்புல்லாக காட்டியிருக்கிறது. டி.இமான் எப்போதும் போல தனது பழைய மெட்டுக்களை, புதுசு...கண்ணா...புதுசு....., என்று சொல்லி கொடுத்திருக்கிறார்.

 

வயதுக்கு வரும் தங்கச்சி, அதை சுற்றி வரும் பாட்டு, என அண்ணன் - தங்கை செண்டிமெண்ட் படத்தில் காட்டப்படும் அதர பழைய காட்சிகளோடு இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தாலும், அதை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இயக்கியிருக்கிறார். 

 

மொத்தத்தில், ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ கொண்டாடும்படி இல்லை என்றாலும், ஒதுக்கிடவும் முடியாது.

 

ரேட்டிங் 3/5