Jun 21, 2020 11:22 AM

’பெண்குயின்’ விமர்சனம்

f91916d02b34a5811d92289f5480a4ab.jpg

Casting : Keerthy Suresh

Directed By : Eshwar Karthik

Music By : Santhosh Narayanan

Produced By : Stone Bench

 

‘நடிகையர் திலகம்’ படத்தின் தெலுங்குப் பதிப்பான ‘மகாநதி’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ், நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘பெண்குயின்’ படம் எப்படி, என்று பார்ப்போம்.

 

குழந்தைகள் காணாமல் போகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கொடூரமாக கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் சடலங்களை போலீஸ் கண்டுபிடிக்கிறது. இதற்கிடையே கீர்த்தி சுரேஷின் குழந்தையும் தொலைந்து போக, காணாமல் போன குழந்தையை தேடும் கீர்த்தி சுரேஷின், வாழ்க்கையில் சில திருப்பங்கள் ஏற்பட, 6 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் கர்ப்பமடைகிறார். நிரைமாத கர்ப்பிணியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது முதல் குழந்தையை தேடும் முயற்சியை தொடர்ந்துக் கொண்டிருக்க, ஒரு நாள் அதில் வெற்றி பெற்றுவிடுகிறார். ஆம், 6 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன அவரது குழந்தை மீண்டும் கிடைத்து விடுகிறான்.

 

இதையடுத்து தனது குழந்தையை கடத்தியவர் யார்? என்பதை அறிவதற்கான முயற்சியில் இறங்கும் கீர்த்தி சுரேஷுக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வர, அந்த உண்மை என்ன? குழந்தைகள் கடத்தப்படுவது எதனால், அதை செய்வது யார்? ஆகிய கேள்விகளுக்கான விடை தான் படத்தின் மீதிக்கதை.

 

மர்மமான முறையில் குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் நடக்க, அதன் பின்னணி என்ன, என்பது தான் படத்தின் ஒன்லைன். இந்த ஒன்லைனை ஒழுங்காக சொல்லியிருந்தால், ரசிக்க கூடிய திரில்லர் படமாக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், இப்படத்தின் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக், அமைத்திருக்கும் திரைக்கதை இக்கருவை சிதைத்துவிட்டது.

 

”நடிக்க தெரியாத நடிகை” என்ற தனது அவப்பெயரை ‘நடிகையர் திலகம்’ படம் மூலம் நீக்கியதோடு, தேசிய விருதும் வென்ற நடிகை என்ற பெருமையை பெற்ற கீர்த்தி சுரேஷ், இந்த படத்தின் மூலம் அத்தனை பெருமைகளையும், பெரிய குழி தோண்டி புதைத்துவிட்டார்.

 

குழந்தையை பறிகொடுத்த ஒரு தாயின் பரிதவிப்பு, கொடூர கொலைகாரனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் தைரியமான பெண்ணின் அதிரடி நடவடிக்கை, நிரைமாத கர்ப்பிணியின் வலி நிறைந்த பயணம் என தனது நடிப்பை வெளிக்காட்ட பல வாய்ப்புகள் இருந்தாலும், எந்த வாய்ப்பையும் கீர்த்தி சுரேஷ் சரியாக பயன்படுத்தாமல் விட்டிருப்பதால், படத்தின் ஒரே ஒரு பிளஸாக இருந்த அவரது கதாப்பாத்திரமும் மைனஸாகி விடுகிறது.

 

கதையின் நாயகி வேடம் தான் இப்படி புஸ்பானமாகி விட்டது என்றால், வில்லனின் வேடம் பெரிய புஸ்பானமாக இருக்கிறது. அதிலும், திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக, இரண்டு வில்லன்கள் வைக்கப்பட்டிருப்பது, திரைக்கதையில் கதாப்பாத்திரங்களையும், காட்சிகளையும் திணிப்பது போல இருக்கிறது.

 

முன்னாள், இன்னாள் என்று கீர்த்தி சுரேஷின் இரண்டு கணவர்கள், போலீஸ் போன்ற கதாப்பாத்திரங்கள் அனைவரும் செட் பிராப்பர்ட்டி போலவே கையாளப்பட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷ் கூட, இரண்டாம் பட்சம் போல தோன்றிவிடுகிறார். அதிலும், குழந்தைகளை கடத்துபவரை கண்டுபிடிக்கும் போது, கீர்த்தி சுரேஷைக் காட்டிலும் வரது நாய்க்கு அதிக முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

 

படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை, எந்தவிதமான விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் இல்லாமல் நகர்வதோடு, ஒரு திரில்லர் படத்தை எப்படி எடுக்க கூடாதோ, அப்படி ஒரு விதத்தில் எடுக்கப்பட்டது போல படு ஸ்லோவாகவும் நகர்கிறது. 

 

பொதுவாக திரைப்படங்களை ஒடிடி தளங்களில் பார்ப்பதே கடுப்பான விஷயமாக இருக்கும் நிலையில், இதுபோன்ற மொக்கையான ஒரு படத்தை ஒடிடி-யில் பார்ப்பது கடுப்போ கடுப்பாகி விடுகிறது.

 

மொத்தத்தில், இது ‘பெண்குயின்’ அல்ல வெறும் பெண் தான்.

 

ரேட்டிங் 2/5