Sep 14, 2019 06:36 AM

’பெருநாளி’ விமர்சனம்

430c66a5aca48670d9cf562067c3baa2.jpg

Casting : Siva, Madhunikka, Grane Manohar, Cesor Manohar, Karthik, Anthony

Directed By : Citizen Mani

Music By : Thashi

Produced By : Roshini Creations

 

காமெடி நடிகர் ‘சிட்டிசன்’ மணி இயக்கத்தில், மார்கிரேட் அந்தோணி தயாரிப்பில், கிரேன் மனோகர், ‘பிச்சைக்காரன்’ பட புகழ் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘பெருநாளி’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

பெருநாளி என்ற ஊரை சேர்ந்த ஹீரோ சிவா, பால் வியாபாரம் செய்து வருகிறார். அவரது அக்காவின் மூன்று மகள்களை தனது பிள்ளையாக நினைத்து வளர்க்கும் சிவாவை அதே ஊரில் உள்ள அவரது அத்தை மகளான ஹீரோயின் மதுனிக்கா காதலிக்கிறார். ஆனால், அவரது அப்பா பழைய பகையால் சிவாவுக்கு தனது பெண்ணை கொடுக்க மட்டேன், என்பதில் உறுதியாக இருக்கிறார்.

 

தொழில்போட்டி காரணமாக கார்த்திக் சிவாவை அவ்வபோது சீண்டுவதோடு, அவரை தீர்த்து கட்டவும் முயற்சித்து வருகிறார்.

 

இதற்கிடையே, ஹீரோ சிவாவின் அக்கா மகள் அரசியல்வாதியின் மகனை காதலிக்கிறார், அதேபோல் சிவாவின் தம்பி அரசியல்வாதி மகளை காதலிக்கிறார். பெரிய இடத்து வீட்டு பிள்ளைகளை காதலிக்கும் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் சிவா, அரசியல்வாதிகள் வீட்டில் சம்மந்தம் பேச, வில்லன் கார்த்திக் மற்றும் அவரது அப்பா இருவரும் சிவாவை பழிவாங்குவதற்காக சூழ்ச்சி செய்து திருமணத்தை நிறுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து ஹீரோ தனது அக்கா மகள்களின் திருமணத்தை முடித்தாரா இல்லையா, அவர் முறை பெண்ணை கரம் பிடித்தாரா இல்லையா, என்பதே மீதிக்கதை.

 

அறிமுக ஹீரோவாக நடித்திருக்கும் சிவா மற்றும் ஹீரோயின் மதுனிக்கா தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். காதல், செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என அனைத்துக் காட்சிகளிலும் சிவா பாஸ் மார்க் வாங்குகிறார். ஹீரோயின் மதுனிக்கா பக்கத்து வீட்டு பெண் போல இருப்பதோடு, நடிப்பையும் இயல்பாக வெளிப்படுத்துகிறார். நடனத்தில் மட்டும் சற்று கவனம் செலுத்தினால் நன்று.

 

வில்லனாக நடித்திருக்கும் ‘பிச்சைக்காரன்’ பட புகழ் கார்த்திக் கவனிக்க வைக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் ஒரிஜினலாக கீழே விழுவது, ஜம்ப் செய்வது என்று அதிரடி காட்டியிருக்கும் கார்த்திக்குக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் பெரிய நடிகர் ஆவார் என்பதை அவர் வரும் அனைத்து காட்சிகளும் நிரூபித்திருக்கிறது.

 

காமெடி நடிகராக நடித்து வந்த கிரேன் மனோகர், குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். படம் முழுவதும் வரும் அவர், கிடைத்த வித்தியாசமான வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.

 

ஹீரோயினின் அப்பாவாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் அந்தோணி, சில காட்சிகளில் வந்தாலும் நச்சென்று நடித்திருக்கிறார்.

 

சிசர் மனோகர் மற்றும் அவரது குழுவினரின் காமெடி காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அதிலும் இயக்குநர் சிட்டிசன் மணியை வைத்து அவர்கள் செய்யும் திருமண காமெடி செம.

 

இசையமைப்பாளர் தஷிக்கு இப்படத்தில் இசை மேதை என்று பட்டம் வழங்கியிருக்கிறார்கள். அதற்கு அவர் தகுதியானவர் என்பதற்கு பாடல்கள் சான்றாக அமைந்திருக்கிறது. குத்து பாடல், மெலொடி பாடல், செண்டிமெண்ட் பாடல் என்று அனைத்து ரக பாடல்களையும், வார்த்தைகள் புரியும்படி இசையமைத்திருக்கும் தஷி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

ஆர்.குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. சிறிய பட்ஜெட் படம் என்பதே தெரியாத வகையில் காட்சிகளை நேர்த்தியாக படம் பிடித்திருப்பவர், சாதாரண லொக்கேஷன்களை கூட தனது கேமரா மூலம் அழகாக காட்டியிருக்கிறார். எடிட்டர் பன்னீரின் உழைப்பு அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது. காட்சிகளை அவர் கோர்வைப்படுத்திய விதம் சிறப்பாக உள்ளது.

 

காமெடி நடிகராக பல படங்களில் நடித்திருக்கும் சிட்டிசன் மணி, இயக்கியிருக்கும் இப்படம் முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே மையப்படுத்தாமல், குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் ஒரு குடும்பபாங்கான படமாக இருக்கிறது. தனக்கு கிடைத்த சிறிய பட்ஜெட்டில் இப்படி ஒரு நேர்த்தியான படத்தை கொடுத்ததற்காக இயக்குநர் சிட்டிசன் மணியை பாராட்டியாக வேண்டும்

 

Perunali Movie Photo

 

காமெடி, காதல், ஆக்‌ஷன் என அனைத்தையும் சமமான அளவில் கொடுத்து, குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இப்படத்தை இயக்குநர் சிட்டிசன் மணி கொடுத்திருக்கிறார். 

 

கதை, திரைக்கதை ஆகியவற்றை நேர்த்தியாக அமைத்திருக்கும் இயக்குநர் சிட்டிசன் மணிக்கு, இதைவிட பெரிய பட்ஜெட் கிடைத்தால் நிச்சயம் அவர் தொழில்நுட்ப ரீதியாக ஒரு பெரிய படத்தை இயக்குவார் என்பது அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது.

 

மொத்தத்தில், ‘பெருநாளி’ குடும்பங்களுக்கான ஒரு படமாக உள்ளது.

 

ரேட்டிங் 2.5/5