Jan 25, 2020 08:28 AM

’சைக்கோ’ விமர்சனம்

71c42686390f1146a53405cf173cb0cb.jpg

Casting : Udhayanithi, Adhithi Rao, Nithya Menon, Rajkumar

Directed By : Mysskin

Music By : Ilaiyaraaja

Produced By : Arun Mozhi Manickam

 

பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கொலையாளியை பிடிக்க முடியாமல் பல ஆண்டுகளாக போலீஸ் திணற, பார்வையற்ற உதயநிதி, அந்த சைக்கோ கொலையாளியை 7 நாட்களில் பிடிக்கிறார். அவர் யார், எதற்காக இப்படி பெண்களை கொலை செய்கிறார், அவரை உதயநிதி ஏன் பிடிக்கிறார், என்பது தான் படத்தின் கதை.

 

போலீஸால் பிடிக்க முடியாத ஒரு கொலையாளியை பிடிக்க களத்தில் இறங்கும் உதயநிதி, அதில் வெற்றி பெற்றுவிடுவார், என்பது படம் பார்ப்பவர்களுக்கு ஆரம்பத்திலேயே தெரிந்தாலும், அது எப்படி என்பது தான் படம்.

 

புத்தர் பற்றிய புத்தகத்தில் அங்குலிமால் என்ற ஒரு கதாப்பாத்திரம் இருக்கிறது. அந்த அங்குலிமால் கதாப்பாத்திரத்தை வைத்துக் கொண்டு இயக்குநர் மிஷ்கின், ஒரு சைக்கோ படத்திற்கான திரைக்கதையை கச்சிதமாக எழுதியிருந்தாலும், அதை ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளோடு காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்துவிட்டது.

 

பார்வையற்றவராக நடித்திருக்கும் உதயநிதி, இதுவரை நடித்தப் படங்களிலேயே இந்த படத்தில் நடிப்பில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார் என்று சொல்லலாம்.

 

வில்லனாக நடித்திருக்கும் புதுமுகம் ராஜ்குமார், அதிகம் பேசவில்லை என்றலும், தனது மவுனத்தின் மூலமாகவே மிரட்டுகிறார். 

 

அதிதி ராவை இதுவரை எந்த படத்திலும் காட்டாத அளவுக்கு அழகாக காட்டியிருக்கிறார்கள். ஆனால், அது ஒரு சில நிமிடங்கள் மட்டும் தான். பிறகு அழுக்கு அறையில் அவரை உட்கார வைத்துவிடுகிறார்கள். விபத்தில் சிக்கி இடுப்புக்கு கீழே செயலிழந்தவராக நடித்திருக்கும் நித்யா மேனன், தான் தைரியமான பெண் என்பதை, தனது வசன உச்சரிப்பின் மூலமாகவே நிரூபித்துவிடுகிறார்.

 

Adhithi Rao

 

காவல் துறை அதிகாரிகளாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், இயக்குநர் ராம் ஆகியோர் டம்மியாக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

இளையராஜாவின் இசை மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசை என்றால் அது ராஜா தான், என்பதை சிறு இடைவெளிக்குப் பிறகு இளையராஜா மீண்டும் நிரூபித்திருக்கிறார். பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தாலும், அதை படத்தில் சரியாக பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. 

 

ஒளிப்பதிவாளர் தன்வீர்மிர் சைக்கோ படத்திற்கான லைட்டிங்கை நேர்த்தியாக பயன்படுத்தியிருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இருட்டில் நடந்தாலும், படம் பார்ப்பவர்களின் கவனம் சிதறாத வகையில் இருட்டை கையாண்டிருக்கிறார். படத்தில் இடம்பெறும் அத்தனை ஷாட்களும் ரசிக்க வைக்கிறது. ஒரு சாதாரண லொக்கேஷனை கூட, அழகியலோடு காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு.

 

பெண்களை கொடூரமாக கொலை செய்யும் சைக்கோவின் பின்னணி குறித்து விரிவாக சொல்லாமல், சுருக்கமாக அதே சமயம் புத்திசாலித்தனமாக சொல்லியிருக்கும் இயக்குநர் மிஷ்கின், கொலை செய்த பிறகு சைக்கோவின் மனநிலை எப்படி இருக்கிறது, என்பதை காட்டாமல் விட்டுவிடுகிறார். கத்தி எடுக்குறாரு, தலையை வெட்டுராரு, அதை பெட்டியில் வைக்குராரு, உடலை பார்சல் செய்ராரு, என்று காட்சிகள் நகர்கிறதே தவிர, ஒவ்வொரு கொலைக்கு பின்னணியில் சைக்கோவின் மனநிலையை எந்த இடத்திலும் மிஷ்கின் காட்டவில்லை.

 

ஹாலிவுட் படங்களின் இன்ஸ்பிரஷன், என்று சொல்லும் அளவுக்கு தான் படத்தின் செட் மற்றும் சைக்கோ கொலையாளியின் செயல்பாடுகள் இருக்கிறது. தமிழ் ரசிகர்களுக்கான ஒரு படமாக சொல்ல வேண்டும், என்று இயக்குநர் மெனக்கெடவில்லை. அதேபோல், போலீஸையும் டம்மியாக்கியிருப்பவர், இளையராஜாவின் பாடலையும் சரியாக பயன்படுத்தாமல் சொதப்பியிருக்கிறார்.

 

மொத்தத்தில், குறைகள் நிறைந்த இந்த ‘சைக்கோ’ வை பார்ப்பதற்கு பதிலாக 2 மணி நேரம் நிம்மதியாக தூங்கலாம்.

 

ரேட்டிங் 2.5/5