Feb 07, 2020 03:45 AM

’சீறு’ விமர்சனம்

44d47a7fb0af3b87d1e7f6b6f917f422.jpg

Casting : Jiiva, Riyasen, Navdeep, Varun, Sathish

Directed By : Rathnasiva

Music By : D.Imman

Produced By : VelS Film International

 

மாயவரத்தில் கேபிள் டிவி நடத்தி வரும் ஜீவாவை, கொலை செய்ய வரும் ரவுடி வருண், ஜீவாவின் தங்கையை மிகப்பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறார். தனது உயிருக்கும் மேலான தங்கையை ஆபத்தில் இருந்து காப்பாற்றியதற்காக, தன்னை கொலை செய்தாலும் பரவாயில்லை, என்ற எண்ணத்தில் ரவுடி வருணை சந்திக்க ஜீவா முயற்சிக்கும் போது, வருணின் உயிருக்கு ஆபத்து இருப்பதை தெரிந்துக் கொள்கிறார். வருணை காப்பாற்ற களத்தில் இறங்கும் ஜீவா, அவரை காப்பாற்றினாரா?, வருண் எதற்காக ஜீவாவை கொலை செய்ய முயற்சித்தார்?, வருணின் உயிருக்கு யாரால் ஆபத்து? ஆகிய கேள்விகளுக்கான விடை தான் மீதிக்கதை.

 

படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு திரைக்கதை சீறிப்பாய்ந்தாலும், அண்ணன், தங்கை செண்டிமெண்ட் நம் ஆழ்மனதை தொடும் விதத்தில், இயக்குநர் ரத்னசிவா காட்சிகளை கச்சிதமாக கையாண்டிருக்கிறார்.

 

ஜீவா எப்போதும் போல் தனது இயல்பான நடிப்பால் கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருப்பதோடு, பஞ்ச் வசனத்தை கூட பக்குவமாக பேசியிருப்பது ரசிக்க வைக்கிறது. தங்கையின் நிலையை எண்ணி வருந்துவதும், அவருக்காக தனது உயிரைக் கொடுக்க தயாராகும் போதும், தனது செண்டிமெண்ட் நடிப்பால் கலங்க வைத்துவிடுகிறார்.

 

படத்தின் இரண்டாவது ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு வருணின் கதாப்பாத்திரம் அமைந்திருக்கிறது. மல்லி என்ற கதாப்பாத்திரத்தில் வருண் காட்டியிருக்கும் அதிரடி அமர்க்களம். 

 

ஹீரோயின் ரியாசுமனுக்கு கமர்ஷியல் பட ஹிரோயின் வேலை தான். ஹீரோவை காதலிப்பது மட்டுமே அவர் வேலை.

 

வில்லனாக நடித்திருக்கும் நவ்தீபின் தோற்றம் மிரட்டலாக இருக்கிறது. அதிகம் பேசாமல், கண்களில் அவர் காட்டும் வில்லத்தனம், அசோக்மித்ரன் என்ற கதாப்பாத்திரத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

 

பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டல். படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிம் இருந்தாலும், அதை ரசிக்கும்படி லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்திருப்பதோடு, படத்தை படு விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருக்கிறார்.

 

இசையமைப்பாளர் டி.இமான், எப்போதும் போல, திரும்ப திரும்ப கேட்கும் ரகத்திலும், முணு முணுக்க வைக்கும் ரகத்திலும் பாடல்களை கொடுத்திருப்பதோடு, பின்னணி இசையிலும் கவனம் செலுத்தியிருக்கிறார். பல இடங்களில் வித்தியாசமான பீஜியங்கள் மூலம் காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

மாஸ் கமர்ஷியல் படத்தை, ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் படமாக கையாண்டிருக்கும் இயக்குநர் ரத்னசிவா, திரைக்கதையை படு வேகமாக நகர்த்தி சென்றிருக்கிறார். முதல் பாதி படம், தொடங்கியதும் முடிந்ததும் தெரியவில்லை. அந்த அளவுக்கு படம் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்கிறது.

 

முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் சற்று குறைந்தாலும், கதை வேறு ஒரு களத்தில் பயணிக்க தொடங்கும் போது, என்ன நடந்திருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது. அதே சமயம், மாணவியின் ஆசைக்கு, இப்படி ஒரு விளைவு ஏற்படும், என்பதை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதேபோல், மாணவியின் பேச்சும் சற்று ஓவராக இருக்கிறது. இருந்தாலும், பெண்களின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் பிரதிபலிக்கும் வகையில் அக்காட்சி இருக்கிறது.

 

ஒரு கமர்ஷியல் படத்தை எப்படி கச்சிதமாக கொடுக்க வேண்டும் என்பது இயக்குநர் ரத்னசிவாவுக்கு நன்றாகவே தெரிகிறது. படத்தின் ஆரம்பக் காட்சியில், சட்டையை சரியாக போடாமல், பைக்கில் வந்து ஆபத்தில் இருக்கும் பெண்களை காப்பாற்றும் ஜீவா, “மாயவரத்துல வந்து மணிமாறன் கேட்டா யார் வேண்டுமானாலும் சொல்வாங்க” என்று அசால்டாக பேசுவதோடு, எம்.எல்.ஏ-வை எச்சரிப்பதை கூட ஜாலியாக செய்கிறார். இப்படி, காட்சிகளை ரொம்ப இயல்பாக நகர்த்தி செல்லும் இயக்குநர் ரத்னசிவா, எந்த இடத்தில் செண்டிமெண்ட் வைக்க வேண்டும், எந்த இடத்தில் ஆக்‌ஷன், எந்த இடத்தில் காதல், அதை எவ்வளவு வைக்க வேண்டும் என்பதை கனகச்சிதமாக செய்திருக்கிறார்.

 

மொத்தத்தில், போரடிக்காத ஒரு சிறப்பான கமர்ஷியல் படத்தை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ’சீறு’ சரியான படம். 

 

ரேட்டிங் 3.75/5