Jul 13, 2019 11:43 AM

’தோழர் வெங்கடேசன்’ விமர்சனம்

25bdfc1c9626a789fd3b4f1ce901649c.jpg

Casting : Harisankar, Monica Chinnakotla

Directed By : Mahashivan

Music By : Sakishna

Produced By : Kaala Films Private Limited

 

தமிழ் சினிமா இதுவரை பாத்திராத ஒரு களத்தோடு வெளியாகியிருக்கும் ‘தோழர் வெங்கடேசன்’ எப்படி என்று பார்ப்போம்.

 

காஞ்சிபுரம் அருகே இருக்கும் சிறு கிராமத்தில் வசிக்கும் ஹீரோ ஹரிசங்கர், சிறியதாக சோடா தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் தினமும் சாப்பிடும் தள்ளுவண்டி உணவு கடை நடத்தும் ஷர்மிளா இறந்து போக, அவரது மகளான ஹீரோயின் மோனிகா சின்னகொட்லாவை தனது வீட்டுக்கு அழைத்து வருகிறார். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து, காதலை பறிமாறி கொள்ளும் வேலையில், அரசு பேருந்தால் ஏற்படும் விபத்தில் ஹரி சங்கரின் இரண்டு கைகளும் போய்விடுகிறது.

 

கை இழந்த ஹரிசங்கரின் சோடா நிறுவனத்தை தொடர்ந்து நடத்தும் மோனிகா, அவருக்கு எல்லாவிதத்திலும் உதவியாகவும் இருக்க, ஹரி சங்கர் இழப்பீடு கேட்டு அரசு போக்குவரத்து துறை மீது வழக்கு தொடர்கிறார். பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு ரூ.20 லட்சத்தை இழப்பீடாக ஹரிசங்கருக்கு அரசு போக்குவரத்து துறை வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாலும், அதை அரசு கண்டுகொள்ளாமல் ஹரிசங்கரை அலக்கழிக்கிறது. ஹரிசங்கர் மீண்டும் நீதிமன்றத்திற்கு போக, அரசு போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்றை நீதிமன்றம் ஜப்தி செய்து ஹரிசங்கரிடம் வழங்குவதோடு, இழப்பீடு வழங்கும் வரை பேருந்து ஹரிசங்கரிடமே இருக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது.

 

ஜப்தி செய்யப்பட்ட பேருந்தால் ஹரிசங்கருக்கு பல பிரச்சினைகள் வர, அவற்றையெல்லாம் எதிர்கொள்பவர், தனது இழப்பீடு பணத்தை பெறுவதற்காக தொடர்ந்து போராட, அவரது போராட்டம் வெற்றி பெற்றதா இல்லையா, என்பதே மீதிக்கதை.

 

சாதாரண மக்களின் கண்ணீர் வாழ்க்கையை சில திரைப்படங்கள் பல கோணங்களில் சொல்லியிருந்தாலும், இப்படி ஒரு களத்தில் இதுவரை யாரும் சொல்லவில்லை. சட்டம் கூட பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான், என்பதையும், காலம் தாழ்த்தி கிடைக்கும் நீதி யாருக்கும் பலன் இல்லை என்பதையும், இப்படம் அழுத்தமாக பதிவு செய்கிறது.

 

ஹீரோவாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஹரிசங்கர், அப்பாவி இளைஞராக இயல்பான நடிப்பின் மூலம் கவர்கிறார். இரண்டு கைகளையும் இழந்த பிறகு இழப்பீடுக்காக போராடும் ஹரிசங்கர், நடிகராக அல்லாமல் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக படம் முழுவதும் பிரதிபலிக்கிறார்.

 

ஹீரோயினாக நடித்திருக்கும் மோனிகா சின்னகொட்லாவுக்கு வசனங்கள் குறைவு என்றாலும், முக பாவனைகள் மூலமாகவே உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். சோடா தயாரித்து அதை சைக்கிளில் கொண்டு சென்று கடை கடையாக விற்று ஹரிசங்கருக்கு உதவியாக இருப்பவர், அமைதியாக இருந்தே மக்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்.

 

போலீஸ் கான்ஸ்டபிள், ஹரிசங்கருடன் பஸ் ஓட்டுபவர், ஹீரோவின் நண்பர்கள் என படத்தில் நடித்தவர்கள் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற கச்சிதமான தேர்வாக இருக்கிறார்கள்.

 

திரைக்கதையுடன் ஒட்டிய காமெடி, காதல் என்று முதல் பாதியை கலகலப்பாக நகர்த்தும் இயக்குநர், இரண்டாம் பாதியில் இரண்டு கைகளை இழந்த ஹரிசங்கரின் வாழ்க்கை மற்றும் இழப்பீடுக்காக அவர் அலக்கழிக்கப்படுவதை அழுத்தமாக பதிவு செய்து நம் இதயத்தை கனக்க வைத்துவிடுகிறார்.

 

சகிஷ்னாவின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும், காதுகளை காயப்படுத்தாமல் மென்மையாக பயணித்திருக்கிறது. குறிப்பிட்ட சில லொக்கேஷன்களில் முழு படத்தையும் முடித்திருந்தாலும் காட்சிகளில் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் வேதா செல்வம், படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

உண்மை சம்பவங்களை தொகுத்து இப்படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கும் இயக்குநர் மகாசிவன், சட்டம் ஏழைகளுக்கு எட்டா கனி என்பதோடு, நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அரசு எந்திரம் சாமாணியர்களை எப்படி வாட்டி வதைக்கிறது என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

இரண்டு கைகளை இழந்தாலும் வாழ்க்கையில் போராடுவது முக்கியம் என்பதை ஹீரோ ஹரிசங்கரின் கதாபாத்திரம் மூலம் உணர்த்தும் இயக்குநர் மகாசிவன், க்ளைமாக்ஸை மட்டும் அப்படி வைக்காமல் இருந்திருக்கலாம். இருப்பினும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும், என்று போராடும் ஏழைகளுக்கு மாற்றம் என்பது மரணம் மட்டும், தான் என்ற இயக்குநரின் முடிவும் ஒரு வகையில் சரியாகத்தான் இருக்கிறது.

 

மொத்தத்தில், இந்த ‘தோழர் வெங்கடேசன்’ நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

 

ரேட்டிங் 3/5