Mar 12, 2023 02:26 PM

தமிழகம் முழுவதும் 600 திரையரங்குகளில் வெளியாகும் ‘கப்ஜா’! - உற்சாகத்தில் படக்குழு

தமிழகம் முழுவதும் 600 திரையரங்குகளில் வெளியாகும் ‘கப்ஜா’! - உற்சாகத்தில் படக்குழு

கன்னட சினிமாவில் ரியல் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கொண்டாடப்படும் நடிகர் உபேந்திராவின் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கப்ஜா’ வரும் மார்ச் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் தமிழ் பதிப்பை தமிழ்நாடு முழுவதும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

 

மிக பிரமாண்டமான திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் உபேந்திரா நாயகனாக நடிக்க, நாயகியாக ஸ்ரேயா நடித்திருக்கிறார். இவர்களுடன் கிச்சா சுதீப், சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடிக்க, முன்னணி நட்சத்திரங்கள் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விளம்பர நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில், உபேந்திரா, ஸ்ரேயா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இணை தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன், ”ஒரு படத்தின் தரம் தெரிந்து தான் நாங்கள் இந்த படத்துடன் இணைந்து இருக்கிறோம். இயக்குநர் சந்துரு நான்கு வருடங்களாக இந்த படத்திற்காக உழைத்து இருக்கிறார். படத்தின் டிரெய்லரை பார்த்து அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவின் முக்கிய நடிகர் அமிதாப்பச்சன் இந்த படத்தை வெகுவாக பாராட்டினார். இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் முக்கிய மைல்கல் ஆக இருக்கும். இந்த படத்தின் கதாபாத்திரம், கதை, திரைக்கதை என அனைத்தும் படத்தை மெருகேற்றியுள்ளது. படம் பார்த்த பின்னர் நான் கூறியது சரியென நீங்களும் கூறுவீர்கள். தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ள லைகா நிறுவனம் மிகப்பெரிய அளவில் படத்தை வெளியிட உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 600 திரையரங்குகளில் ‘கப்ஜா’ வெளியாக உள்ளது. கன்னட திரைப்படம் ஒன்றி தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய அளவில் வெளியாவது இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன். நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய படமாக இருக்கும்.” என்றார்.

 

இயக்குநர் சந்துரு பேசுகையில், “எங்கள் படம் மார்ச் 17 அன்று வெளியாகவிருக்கிறது. இந்த படத்தைத் தமிழில் வெளியிடப் போகும் லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், GKM தமிழ்குமரன் அவர்களுக்கும் நன்றி. உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்கு தேவை. படம் பார்த்துவிட்டு, உங்களுடைய கருத்தைக் கூறுங்கள். நன்றி” என்றார்.

 

Kabzaa

 

நடிகை சுதா பேசுகையில், “இது தமிழ்ப் படமாகத் தான் உங்கள் முன் வரப்போகிறது. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் சந்துருவிற்கு நன்றி. இந்த படத்தை அவர் மிகச்சிறப்பாக உருவாக்கியுள்ளார். அவர் மீது இருக்கும் நம்பிக்கையில் தான் நாங்கள் அனைத்தையும் செய்தோம். அவர் ஒவ்வொரு காட்சியை எடுக்கும் போது, அவருக்கு இருக்கும் பூரிப்பும், ஆர்வமும் தான் எங்களை ஊக்கப்படுத்தியது. கேமரா மேன் சிறிய பள்ளி மாணவன் போல் இருந்தார், அவரை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவருடைய பணியைப் பார்த்துப் பிரமித்துப் போனோம். உபேந்திரா, ஸ்ரேயா, சந்துரு உடன் இணைந்து பயணித்தது, திரையைப் பகிர்ந்து கொண்டது  மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இந்த படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள். படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என்று விரும்புகிறேன். தயாரிப்பாளர், தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகை ஸ்ரேயா சரண் பேசுகையில், “சென்னை எப்பொழுதும் எனக்கு ஸ்பெஷலாக தான் இருக்கும். இந்த கப்ஜா என்ற எனது மனதிற்கு நெருக்கமான ஒரு படத்துடன் நான் இப்போது மீண்டும் வந்திருக்கிறேன். இந்த படத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் சந்துரு அவர்களுக்கு நன்றி. உபேந்திரா சார் போன்ற ஒரு அற்புதமான நடிகருடன் திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. மார்ச் 17 அன்று படம் வெளியாக இருக்கிறது. உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்குத் தேவை. படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள். நன்றி” என்றார்.

 

நடிகர் உபேந்திரா பேசுகையில், “இந்த படத்தை வெளியிடப் போகும் லைகா புரொடக்‌ஷன்ஸ், GKM தமிழ் குமரன் மற்றும் சுபாஸ்கரன் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தின் டிரெய்லர் பார்க்கும் போதே, இது தொழில்நுட்ப கலைஞர்களின் படம் என்று உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.  இயக்குநர் சந்துருவின் நான்கு வருடக் கனவு இது. அவருடைய பெருங்கனவு இந்த படத்தின் டிரெய்லரில் தெரிகிறது. இந்த படத்தில் கிச்சா சுதீப், சிவராஜ்குமார் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருக்கின்றனர். உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்குத் தேவை. கூடிய சீக்கிரம் இங்கு நேரடியாக ஒரு தமிழ்த் திரைப்படம் பண்ண ஆவலாக இருக்கிறேன். படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்.” என்றார்.

 

ஏ.ஜெ.ஷெட்டி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். தீபு எஸ்.குமார் படத்தொகுப்பு செய்துள்ளார்.