தயாரிப்பாளர்களுக்கு ஜோதிகா போடும் 3 கண்டிஷன்கள்!

திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை தவிர்த்து வந்த ஜோதிகா, ‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அப்படம் பெற்ற வெற்றியால் தொடர்ந்து நடித்து வரும் அவர் பெண்களை மையப்படுத்திய கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அதன்படி, அவர் நடித்த ‘மகளிர் மட்டும்’ படமும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. இதையடுத்து பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ படத்தில் வித்தியாசமான அதிரடி போலீஸ் வேடத்தில் நடித்த ஜோதிகா, அடுத்ததாக இந்தியில் வெற்றி பெற்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார்.
வித்யா பாலன் நடித்த ‘துமாரி சுலு’ தான் அப்படம். இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் தனஞ்செழியன் பெற்றுள்ளார். இதில் ஜோதிகாவை நடிக்க வைக்க முடிவு செய்த தனஞ்செழியன், அவர் நடிக்கவில்லை என்றால் இப்படத்தை கைவிடும் முடிவில் இருந்தாரம்.
இது குறித்து ஜோதிகாவிடம் அவர் கூறிய போது, உடனே நடிக்க சம்மதம் தெரிவித்த ஜோதிகா, 3 கண்டிஷன்களை போட்டாராம்.
அதாவது அலுவலக நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் படப்பிடிப்பு மாலை 6 மணிக்கு முடிந்துவிட வேண்டும், ஞாயிற்றுகிழமைகளில் படப்பிடிப்பு வைக்க கூடாது மற்றும் 3 மாதங்களில் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும். இந்த மூன்று கண்டிஷன்களுக்கு ஓகே என்றால், கால்ஷீட் கொடுக்க நானும் ரெடி என்றாராம்.
ஜோதிகாவின் மூன்று கண்டிஷன்களையும் ஏற்றுக்கொண்ட தனஞ்செழியன், படத்திற்கான முதல் கட்ட வேலைகளில் தொடங்கிவிட்டாராம்.
ஆரம்பத்தில் தனது சொந்த நிறுவனமான டி2 நிறுவனம் தயாரிக்கும் படங்களில் நடித்து வந்த ஜோதிகா, தற்போது வெளி நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களிலும் நடிக்க முடிவு செய்துள்ளாராம். ஆனால், அவர் தனஞ்செழியனுக்கு போட்ட மூன்று கண்டிஷன்களோடு தான் மற்ற தயாரிப்பு நிறுவனங்களிலும் கதை கேட்கவே நேரம் கொடுக்கிறாராம்.