தமிழ் பேசியதால் சினிமாவில் ரொம்ப கஷ்ட்டப்பட்டேன் - ஐஸ்வர்ய ராஜேஷ் வருத்தம்!

கலை, தொழில், பண்பாடு, பொழுதுபோக்கு என பல்வேறு துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு ரவுண்ட் டேபிள் இனிஷியேட்டிவ் சார்பில் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டு வருகிறது. ‘ப்ரைட் ஆஃப் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் நடைபெறும் இவ்விழாவின் 2018 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இதில் அரசுத்துறை அதிகாரிகள், சினிமா நடிகை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், கர்நாடக இசைக்கலைஞர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு துறையைச் சேர்ந்த சாதனையாளர்கள் பங்கேற்று விருதுகளை பெற்றுக் கொண்டார்கள்.
பொழுதுபோக்கு துறையில் இன்ஸ்பிரேஷன் விருது இயக்குநர் மகேந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் விருது வழங்கினார். பிறகு பேசிய அவர், “மகேந்திரன் அவர்கள் இயக்கிய உதிரிபூக்கள் படத்தை பார்த்து விட்டு சினிமாவை நான் பார்க்கும் கண்ணோட்டமே மாறியது” என்று கூறினார்.
விருதை பெற்றுக்கொண்ட மகேந்திரன், “நான் அதிகம் மதிக்கும் பிசி ஸ்ரீராம் கையால் இந்த விருதை வாங்கியதில் பெருமை அடைகிறேன்” என்றார்.
பொழுதுபோக்கு துறையில் வளரும் கலைஞர் விருதை இயக்குனர் மகேந்திரன் வழங்க ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுக் கொண்டார். அவர் பேசும்போது, "சென்னையில் பிறந்து வளர்ந்து நிறைய தமிழ் பேசியதாலே சினிமாவில் சாதிக்க நிறைய கஷ்டப்பட்டேன். காக்கா முட்டை படத்தில் குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும்போது நிறைய பயத்தோடு தான் நடித்தேன். அது எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் பேசும் கதாநாயகிகள் நிறைய பேர் இருக்காங்க, அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். செக்க சிவந்த வானம் படத்தில் நான் முதல் காட்சியில் ஜோதிகா மேடத்தோடு இணைந்து நடித்தேன். முதல் ஷாட் முடிந்தபோது சரியா பண்ணேனா என தெரியவில்லை, மணி சாரிடம் போய் கேட்டேன். அவர் கிரேட்னு சொன்னார். அது என் பெரும் பாக்கியம்" என்றார்.