பிரபல எடிட்டர் சேகர் மரணம்!

200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்துள்ள தென்னிந்திய திரையுலகின் முக்கியமான எடிட்டர் சேகர் இன்று மரணம் அடைந்தார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலன் இன்றி இன்று (மார்ச் 22) காலை 6 மணியளவில் உயிரிழந்தார்.
உயிரிழந்த எடிட்டர் சேகருக்கு சுந்தரி சேகர் என்ற மனைவியும், தீபலட்சுமி, திலகவதி, நித்யா ஆகிய மூன்று பெண்களும் உள்ளனர். பெண்கள் மூவருக்கும் திருமணமாகிவிட்டது. இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
பாசில், சித்திக் போன்ற முன்னணி இயக்குநர்களுக்கு ஆஸ்தான எடிட்டராக பணிபுரிந்துள்ள சேகர், தென்னிந்திய சினிமாவின் முதல் சினிமாஸ்கோப் படம் ‘தச்சோலி அம்பு’, முதல் 70 எம்.எம் படமான ‘படையோட்டம்’ மற்றும் இந்தியாவின் முதல் 3டி படமான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ ஆகிய படங்களுக்கு எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘வருஷம் 16’ படத்திற்காக தமிழக அரசு விருது, ‘1 முதல் 0 வரை’ என்ற மலையாள படத்திற்காக கேரள அரசு விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கும் இவர் தமிழில் கடைசியாக ‘சாது மிரண்டால்’ என்ற படத்தில் பணியாற்றினார். பிறகு தனது உதவியாளர்களை வைத்து படங்களுக்கு எடிட் செய்து, அவர்களுடைய பெயரையே தலைப்பில் போட வைத்து அழகு பார்த்தவர், திரையுலகில் பணிபுரிந்தது போதும் என, திருச்சி அருகே உள்ள தனது சொந்த ஊரான தென்னூரில் செட்டிலாகிவிட்டார்.
எந்த ஒரு சாதனை செய்தாலும் அது குறித்து தான் பேசுவதை விட தனது வேலை பேச வேண்டும், என்ற குறிக்கோளுடன் வாழ்ந்திருக்கும் எடிட்டர் சேகர் பற்றி WIKIPEDIA போன்ற இணையங்களில் தகவல் இல்லாதது துரதிஷ்டமானது.