Mar 09, 2018 06:52 AM

கேரள அரசின் விருது பெற்ற ‘கேணி’!

கேரள அரசின் விருது பெற்ற ‘கேணி’!

கோடைக்காலம் தொடங்கிய சில நாட்களிலேயே  தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமும் தொடங்கிவிட்டது. சென்னை போன்ற பெருநகரங்களிலேயே குடிநீருக்காக மக்கள் பிளாஸ்டிக் குடத்துடன் அளைய தொடங்கிவிட்ட நிலையில், நாட்கள் போக போக தண்ணீருக்காக தமிழகத்தில் என்ன என்ன கொடுமைகள் நடக்கப் போகிறதோ, என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

 

இப்படிப்பட்ட சூழலை மிக அழுத்தமாகவும், அக்கறையோடும் சொல்லிய படமாக கடந்த மாதம் வெளியான படம் தான் ‘கேணி’. இதில் பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர், ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

 

தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியான இப்படத்தின் திரைக்கதை, முல்லைப் பெரியாறு பிரச்சினையை பிரதிபலிப்பது போலவே இருந்தது. மேலும், இப்படத்தை இயக்கிய எம்.ஏ.நிஷாந்த் மற்றும் ப்ராகிரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் படத்தை தயாரித்த சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோர் மலையாளிகளாக இருந்தாலும், தண்ணீர் விவகாரத்தில் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு இடையே எழும் பிரச்சினையை கவணமாக கையாண்டதோடு, நியாயமான முறையில் படத்தில் தீர்வும் சொல்லியிருந்தார்கள். இதன் காரணமாக இப்படத்தை தமிழக ஊடகங்கள் பாராட்டி தீர்த்தாலும், கேரளாவின் சில பகுதிகளில் இப்படம் கடும் எதிர்ப்பை சந்தித்தது.

 

இந்த நிலையில், இப்படத்திற்கு கேரள அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது. இப்படத்தின் இயக்குநர் எம்.ஏ.நிஷாந்த் சிறந்த கதை ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

தமிழகம் - கேரளம் இடையே உள்ள தண்ணீர் பிரச்சினையில் தமிழகத்திற்கான நியாயத்தை தனது திரைப்படத்தின் மூலம் பேசிய ஒரு இயக்குநருக்கு எதிர்ப்புகளை மீறி கேரள அரசு விருது அறிவித்திருப்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.