Jun 12, 2019 10:31 AM

மிஷ்கின், சுசீந்திரன் நடிப்பில் உருவான ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ - 14 ஆம் தேதி ரிலீஸ்

மிஷ்கின், சுசீந்திரன் நடிப்பில் உருவான ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ - 14 ஆம் தேதி ரிலீஸ்

இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படம் இம்மாதம் 14 ஆம் தேதி ரிலீஸாகிறது.

 

’சுட்டு பிடிக்க உத்தரவு’ படத்தின் டிரெய்லர் மற்றும் காட்சி விளம்பரங்கள் ரசிகர்களிடையே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. கூடுதலாக, படத்தின் தலைப்பு இது நிக் ஆஃப் டைம் த்ரில்லர் வகையை அடிப்படையாக கொண்டது என்பதை குறிக்கிறது. இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா, முன்னணி இயக்குநர்களான மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோரை இந்த படத்தில் ஏன் நடிக்க வைத்தார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

 

இது குறித்து ராம்பிரகாஷ் ராயப்பா கூறும்போது, ”அவர்கள் வெறும் இயக்குனர்கள் என்பதையும் தாண்டி, தமிழ் சினிமாவில் எல்லாவற்றையும் அறிந்த மேதைகள். படப்பிடிப்பில் பல நேரங்களில், நானே அவர்களின் நுணுக்கமான நடிப்பை கண்டு வியந்திருக்கிறேன். ஸ்கிரிப்ட்டில் நான் எழுதிய கதாபாத்திரங்களுக்கு அவர்களின் நடிப்பு மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர்கள், அவர்களை இயக்கும்போது தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. இருப்பினும், அத்தகைய தவறான கருத்துக்களை படப்பிடிப்பில் தூள் தூளாக்கி விட்டனர். அவர்கள் நடிப்பில் மட்டுமே தங்கள் முழு கவனத்தையும் செலுத்தினார்கள், ஒரு சிறிய ஆலோசனையோ அல்லது மாற்றங்களையோ கூட என்னிடம் சொல்லவில்லை. பல நேரங்களில், விக்ராந்த் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒரு நடிகர் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். தற்போது நல்ல நல்ல படங்கள் அவர் கைவசம் உள்ளன. அவரது நடிப்பு நிச்சயம் அனைவராலும் மிகவும் பாராட்டப்படும். அதுல்யா ரவி தனது நடிப்பில் ஒரு யதார்த்தமான தன்மையை கொடுக்கும் ஒரு அரிதான நடிகை. இந்த படத்தில் நடித்த அத்தனை பேருமே மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.” என்றார்.

 

Suttu Pidikka Udharavu

 

படத்தின் கதை மற்றும் களத்தை பற்றி கேட்டபோது படத்தை பற்றி எதையும் வெளிப்படுத்த அவர் விரும்பவில்லை. ஆனால், ”இது ஒவ்வொரு நிமிடமும் ஆச்சரியமான விஷயங்களை கொண்ட ஒரு த்ரில்லர் திரைப்படம் மற்றும் உணர்வுபூர்வமாகவும் இருக்கும்” என்பது குறிப்புகள் மூலம் தெளிவாகிறது.

 

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரித்துள்ள இந்த சுட்டுப் பிடிக்க உத்தரவு வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். சுஜீத் சாரங் ஒளிப்பதிவு செய்ய, ஜி.ராமாராவ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.